Pages

Friday 6 March 2015

செங்கமடையில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்காலச் சின்னங்கள் கண்டுபிடிப்பு - தினமணி செய்தி


இராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்முறையாக மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்காலச் சின்னங்கள் கண்டுபிடிப்பு



இராமநாதபுரம் மாவட்டத்தை கி.பி.1711 முதல் கி.பி.1725 வரை ஆட்சி செய்த விஜய ரகுநாத சேதுபதி பிரஞ்சு தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு இரண்டு கோட்டைகளைக் கட்டியுள்ளார். இக்கோட்டைகள் வட்டவடிவ அமைப்பைக் கொண்டுள்ளன. கமுதிக்கோட்டை தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளது. மற்றொரு கோட்டை இராமநாதபுரத்திலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் R.S.மங்கலத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் செங்கமடை என்ற ஊரில் உள்ளது. இக்கோட்டையில் தங்குவதற்கும் பயன்பாட்டிற்கும் அறைகள் இருந்தமைக்கான தடயங்கள் உள்ளன. கோட்டையின் நடுவில் ஒரு கோயிலும் ஒரு குளமும் உள்ளன. 

அக்குளத்தில் இராமநாதபுரம் இராமலிங்கவிலாசம் அரண்மனை காப்பாட்சியர் சக்திவேல், திருப்புல்லாணி தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியர் இராஜகுரு ஆகியோர் களமேற்பரப்பு ஆய்வு செய்த போது கறுப்பு சிவப்பு மண்பாண்ட ஓடுகள், கறுப்பு மண்பாண்ட ஓடுகள், சிவப்பு மண்பாண்ட ஓடுகள், சில்லுகள், முதுமக்கள் தாழிகள், மண்குவளைகள், குவளைத்தாங்கிகள், இரும்பின் மூலப்பொருள் ஆகிய பெருங்கற்கால நினைவுச்சின்னங்களைக் கண்டுபிடித்தனர்.
      இந்த எச்சங்கள் பெரும்பாலும் நீத்தார் நினைவுச் சின்னங்களாகப் பயன்படுத்தப்பட்ட தடயங்களாக உள்ளன. இன்று இருப்பதைப்போல அன்றைய காலகட்டத்திலும் குடியிருப்புகள், நீத்தார் நினைவுச் சின்னங்களான சுடுகாடுகள் ஆகியவை தனித்தனியாக இருந்துள்ளன. கோட்டைப் பகுதியானது நீத்தார் நினைவுச் சின்னப்பகுதியாக உள்ளது. குடியிருப்புப் பகுதிகள் அமைந்த இடம் கிடைக்கவில்லை.
      பெருங்கற்காலமானது தமிழகத்தில் கி.மு. ஆயிரம் முதல் கி.பி. முதல் நூற்றாண்டு வரை அதாவது சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என தொல்லியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
      அவ்வகையில் இங்கு கறுப்பு சிவப்பு மண்பாண்ட ஓடுகள், கறுப்பு மண்பாண்ட ஓடுகள், சிவப்பு மண்பாண்ட ஓடுகள் ஆகியவை கிடைக்கின்றன. இவை ஈமச் சின்னங்களுக்கு பயன்படுத்தப்பட்டவையாக உள்ளன. குளத்தின் உள் பகுதியில் முழுமையாகவும், சிதைந்த நிலையிலும் முதுமக்கள் தாழிகள் கிடைக்கின்றன.
      பெருங்கற்கால ஈமச் சின்னமானது, கல்திட்டை, கல்பதுக்கை, கல்வட்டம், நெடுங்கற்கள் ஆகிய வடிவங்களில் மலை மற்றும் மலை சார்ந்த குறிஞ்சி நிலப்பகுதிகளில் அதிகமாகக் கிடைக்கின்றன. ஆனால்      வயல் மற்றும் வயல் சார்ந்த மருத நிலப்பகுதிகளில் முதுமக்கள் தாழிகள் மட்டுமே கிடைக்கின்றன.
      தமிழ்நாடு வரலாற்றின் கால வரிசைப்படியில் தொல் பழங்காலம், இடைக்கற்காலம், புதிய கற்காலம், நுண்ணிய கற்காலம், பெருங்கற்காலம், சங்ககாலம், வரலாற்றுக்காலம், என காலக் கணக்கீடு செய்யப்படுகிறது.
      இராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே தொல்லியல் துறையால் அகழாய்வு செய்யப்பட்ட அழகன்குளம் சங்ககாலத்தைச் சேர்ந்ததாகவும், தேரிருவேலி வரலாற்றுக்காலத்தைச் சேர்ந்ததாகவும் உள்ளன. ஆனால் செங்கமடை அவற்றைவிட பழமையான பெருங்கற்காலத்தைச் சேர்ந்ததாக உள்ளது.
      இராமநாதபுரம் மாவட்டத்தில் முதுமக்கள் தாழிகள் கிடைப்பது இதுவே முதல்முறை.
      மேலும் மனித வாழ்வின் தொடக்க கால நாகரிகங்கள் யாவும் ஆற்றங்கரைகளில் தோன்றியுள்ளன. இக்கோட்டையின் அருகில் கோட்டைக்கரை ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் பெயர்கூட கோட்டையின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம்.
      மேலும் இப்பகுதியில் மண்குவளைகள், குவளைத்தாங்கிகள் மற்றும் பாண்டி ஆட்டத்துக்குப் (நொண்டி விளையாட்டு) பயன்படுத்தப்பட்ட சில்லுகள் ஆகியவை கிடைத்துள்ளதாலும், நீத்தார் நினைவுச்சின்னங்கள் காணப்பட்டுள்ள பகுதிக்கு 300 மீட்டர் தூரத்தில் ஆறு அமைந்துள்ளதாலும் குடியிருப்புப் பகுதி  ஆற்றங்கரையின் ஓரத்தில் இருந்திருக்கலாம்.
      பெருங்கற்கால ஈமச் சின்னங்களில் இரும்பும், செம்பும் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன. இங்கு இரும்பு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருள் கிடைத்துள்ளதால் இவை பெருங்கற்காலத்தைச் சேர்ந்தவை என்பது உறுதி ஆகிறது.
      தொல்லியல் துறையினர் முழு அளவிலான அகழாய்வு மேற்கொண்டால் இதன் முழு வரலாறும் தெரியவரும்.


வே.இராஜகுரு,
பொறுப்பாசிரியர்,
தொன்மைப் பாதுகாப்பு மன்றம்,
S.S.A.M.அரசு மேல்நிலைப்பள்ளி,
திருப்புல்லாணி - 623 532
CELL NO : 9944978282, 8012023745
ä‹dŠrš : rationalraja@gmail.com  
க.சக்திவேல்,
காப்பாட்சியர்,
இராமலிங்கவிலாசம் அரண்மனை,
தொல்லியல் துறை
இராமநாதபுரம்.
CELL NO : 8608222166