Pages

Sunday 9 October 2016

திருமலையில் உலக அகிம்சை நாள் விழா பயிலரங்கம்



திருப்புல்லாணி பள்ளி மாணவிகள் பேசுகிறார்கள்
சென்னை அகிம்சை நடை அமைப்பும், இராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பு மையமும், திருப்புல்லாணி தொன்மைப் பாதுகாப்பு மன்றமும் இணைந்து சிவகங்கை மாவட்டம் திருமலையில் உலக அகிம்சை நாள் விழா பயிலரங்கம் நடைபெற்றது.  

தமிழகம் முழுவதும் அழியும் நிலையில் உள்ள சமண வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட தொல்லியல் சின்னங்களைக் கண்டுபிடித்து பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அகிம்சை நடை அமைப்பு மாணவர்களுக்கு தொல்லியல் சின்னங்களின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு அன்று, ஏதாவது ஒரு தொல்லியல் சின்னங்களைப் பார்வையிடும் விழிப்புணர்வுப் பயணத்தை நடத்தி வருகிறது.
  
மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2, ஒவ்வொரு ஆண்டும் உலக அகிம்சை நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் சிறப்பை மாணவர்களுக்கு உணர்த்த, சிவகங்கை மாவட்டம் திருமலையில் பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது. 

பயிலரங்கத்துக்கு தலைமை தாங்கிய தொல்லியல் ஆய்வாளர் இராஜகுரு, திருமலையில் சுமார் 40௦௦ ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆதிமனிதர்கள் வரைந்த பாறை ஓவியங்கள், 22௦௦ ஆண்டுகள் பழமையான சமண முனிவர்கள் தங்கி இருந்த குகைகள், படுக்கைகள் மற்றும் தமிழி கல்வெட்டுகள், கி.பி.8 நூற்றாண்டைச் சேர்ந்த முற்காலப்பாண்டியர் காலத்தில் அமைக்கப்பட்ட சிவனுக்கான குடைவரைக்கோயில், கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிற்காலப்பாண்டியர் கால கட்டுமான சிவன்கோயில் ஆகியவற்றின்  சிறப்புகளை எடுத்துக்கூறினார். 

துணைத்தலைவர் தாஸ் பரிசு வழங்குகிறார்


     சமண சமயம் தோற்றுவிக்கப்பட்ட வரலாறு, தீர்த்தங்கரர்களின் பெருமைகள், சமண முனிவர்கள் அறிவுறுத்திய அகிம்சை கொள்கைகள், சமண சமயம் இந்த உலகத்துக்கு வழங்கிய அறக்கருத்துகள் ஆகியவை பற்றி தமிழ் இலக்கியங்களில் உள்ள கருத்துகளை ஆதாரமாகக் கொண்டு துணைத்தலைவர் தாஸ் விளக்கினார்.

காந்தியடிகள் இந்திய விடுதலைக்கான போராட்டத்தின் போது அகிம்சை வழியைப் பின்பற்றி வெற்றி பெற்றதன் மூலம் இது எக்காலத்துக்கும் ஏற்றது என அகிம்சை நடையின் செயலாளர் தனஞ்செயன் பேசினார். 



இதில் திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தாதனேந்தல் சினேகா, திருப்புல்லாணி விசாலி, பொக்கனாரேந்தல் அபர்ணா, முத்துவீரப்பன்வலசை அபிநயா ஆகியோர் கலந்து கொண்டு சாதாரண மக்களின் வரலாறுகளை, வாய்மொழித் தரவுகள், களஆய்வுகள் மூலம்  ஆவணப்படுத்த அந்தந்த ஊர் மாணவர்கள் முன்வரவேண்டும் என வலியுறுத்தினர். தங்கள் ஊர் வரலாறை ஆவணப்படுத்திய அனுபவங்களை நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டனர். பயிலரங்கில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு அகிம்சை நடை அமைப்பினர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பிரபுகாந்தி, சௌதர்மேந்திரன், நாகேந்திரன், வாசுகி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.







தொல்லியல் ஆய்வாளர் இராஜகுரு திருமலையில் நிகழ்த்திய  உரை


இராமநாதபுரம் மாவட்டத்தில் 34 வது அகிம்சை நடை





தமிழகத்தில் அழியும் நிலையில் உள்ள தொன்மைச் சிறப்பு வாய்ந்த சமண வழிபாட்டுத்தலங்களைக் கண்டறிந்து அவற்றைப் பாதுகாக்கும் பணியை அகிம்சை நடை என்ற அமைப்பு செய்து வருகிறது. இதன் உறுப்பினர்கள் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று மாநிலம் முழுவதும் சமண தடயங்கள் இருக்கும் பகுதிகளுக்குச் சென்று அவற்றை சுத்தம் செய்து பாதுகாக்கும் செயல்பாட்டை உள்ளூர் மக்களுடன் இணைந்து செய்து வருகிறார்கள். 
பிரபுகாந்தி பேசுகிறார்

பாதக்கோயிலை பார்வையிடுகிறார்கள்
 
இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே இடையமடத்தில் அழிந்த நிலையில் இருந்த ஒரு சமணப்பள்ளி சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இப்பள்ளியை பாதுகாக்கும் நோக்கிலும், (அக்டோபர் 2) உலக அகிம்சை நாளை முன்னிட்டு  தொல்லியல் தடயங்களைப் பற்றி உள்ளூர் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வேண்டி,  34 ஆவது அகிம்சை நடை இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள சமணத் தடயங்களை காணும் வகையில் அக்டோபர் 1 மற்றும் 2 ஆம் நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்டது. 

தொல்லியல் ஆய்வாளர் இராஜகுருசமணத்தடயங்கள் பற்றி உரையாற்றுகிறார்

     முதல் நாள் அன்று அனுமந்தக்குடி, இடையமடம் சமணப்பள்ளிகள், திருப்புல்லாணியில் ஆற்றின் கால்வாயில் மூழ்கிய நிலையில் இருக்கும் மகாவீரர் சிலையை மீட்கும் செயல்பாடும் திட்டமிடப்பட்டது. இடையமடம் சமணப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், அகிம்சை நடை செயலாளர் தனஞ்செயன், பொருளாளர் சௌதர்மேந்திரன், துணைத்தலைவர் தாஸ் மற்றும் நாகேந்திரன், ஆர்வலர் பிரபுகாந்தி ஆகியோர் பேசினர். இராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பு மைய தலைவர் இராஜகுரு, செயலாளர் காளிமுத்து ஆகியோர் இம்மாவட்டத்தில் உள்ள சமணத் தடயங்கள் பற்றிப் பேசினர். 

நூல் வெளியிடும் நிகழ்ச்சி
 தொல்லியல் ஆய்வாளர் வே.இராஜகுரு எழுதிய “இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் சமணத்தடயங்கள்” என்ற சிறிய நூல் இடையமடம் சமணப்பள்ளியில் வெளியிடப்பட்டது. அங்கிருந்து திருப்புல்லாணி கோரைக்குட்டம் பகுதியில் ஆற்றில் புதைந்த நிலையில் இருந்த மகாவீரர் சிலை, மற்றும் ஒரு இயக்கி சிலையை வெளியில் எடுத்து சுத்தம் செய்தனர். 
சிலையை மீட்கும் பணியில் ஆர்வலர்கள்
சிலையை சுத்தம் செய்யும் பணியில் ஆர்வலர் ஒருவர்
 
வழிபாடு நடத்துகின்றனர்கள்
மீட்கப்பட்ட சிலைகளுடன்
மீட்கப்பட்ட மகாவீரர் மற்றும் இயக்கி சிலைகள்





தந்தி டிவி செய்தி


கிழக்குக் கடற்கரைப்பகுதிகளில் காணப்படும் மருத்துவச் சிறப்புக்கொண்ட தொன்மையான உகாய் மரங்கள் - வே.இராஜகுரு



தாதனேந்தல் நொண்டிக் கருப்பன் கோயிலில் உள்ள மரம்
அறிமுகம்
 வறட்சிக்குப் பெயர் பெற்ற இராமநாதபுரம் மாவட்டத்தில் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவை கருவை மரங்கள் தான். வறண்ட மற்றும் நீர்ப்பற்றாக்குறை உள்ள இம்மாவட்டத்தின் பல இடங்களில் மற்ற மரங்கள் வளர்வதில் பல சிக்கல்கள் உள்ளன. எனவே பசுமை போர்த்திய நிலையில் இம்மாவட்ட மக்களின் நல்லதும் கெட்டதுமாக கருவை மரங்கள் விளங்குகின்றன.
 இந்நிலையில் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான வே.இராஜகுரு மற்றும் மன்றத்தைச் சேர்ந்த மாணவிகள் தாதனேந்தல் சினேகா, திருப்புல்லாணி விசாலி, பொக்கனாரேந்தல் அபர்ணா, முத்துவீரப்பன்வலசை அபிநயா ஆகியோர், மிக அரிதான மருத்துவச் சிறப்பு வாய்ந்த பழமையான உகாய் எனும் குறுமரங்கள் இம்மாவட்டத்தின் சில இடங்களில் காணப்படுவதைக் கண்டறிந்து ஆய்வு செய்தனர். 

இது பற்றி அவர்கள் கூறியதாவது,

மிஸ்வாக்

ஆங்கிலத்தில் மிஸ்வாக் எனவும் அரபியில் அராக் எனவும் அழைக்கப்படும் இம்மரங்கள், திருப்புல்லாணி அருகில் மேலப்புதுக்குடியிலும், இராமநாதபுரம் சந்தவளியான் கோயில் வளாகத்திலும், தாதனேந்தல் நொண்டிக் கருப்பன் கோயிலிலும், கடுகுசந்தைசத்திரம் சோணைக் கருப்பசாமி கோயிலிலும் காணப்படுகின்றன. இவை சுமார் 4௦௦ ஆண்டுகளுக்கும் மேல் பழமையான மரங்களாக உள்ளன. மிஸ்வாக் என்ற பெயரில் வரும் பற்பசை இம்மரத்தின் வேரிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் சல்வடோரா பெர்சிக்கா ஆகும். இதன் தாவரவியல் பெயர் கொண்டு பாரசீகம் இதன் தாயகமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
 
மேலப்புதுக்குடியில் உள்ள மரம்


அமைப்பு 

உகாய் பாலை நிலத்து மரங்களில் ஒன்று. இது சங்க இலக்கியங்களில் பாலைத்திணைக்குரிய மரமாக குறிப்பிடப்படுகிறது. இதன் அடி மரம் மெலிதாக சொரசொரப்பாக சாம்பல் நிறத்துடன் இருக்கும். இம்மரத்தின் தண்டு  புறாவின் முதுகுக்கு உவமை கூறப்படுகிறது. இம்மரத்தின் காய்கள் உருண்டையாய், சிவப்பு நிறத்தில் இருக்கும். இதன் பூக்கள் சிறியதாக பசுமை படர்ந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். இலைகள் முட்டை வடிவில் இருக்கும். இவை ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பூத்து மார்ச்சு மாதங்களில் காய்ப்பவை. கடலோர சமவெளிகளிலும், களர் மற்றும் உவர் நிலங்களிலும் இம்மரங்கள் வளரும்.

கடுகுசந்தைசத்திரம் சோணைக் கருப்பசாமி கோயிலில் உள்ள மரம்

பயன்கள் 
 
இம்மரத்தின் இலைகளும், பழங்களும் சிறுநீரக கல்லுக்கும், வீக்கத்துக்கும் மிகச்சிறந்த மருந்தாகும். ஆப்பிரிக்காவில் இதன் இலைகளை உணவாகப் பயன்படுத்துகிறார்கள். இதன் வேரிலிருந்து எடுக்கப்படும் குச்சிகள் பல்துலக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இதன் காயிலிருந்து வெடித்து உதிரும் விதை மிளகைப்போல் காரம் உடையது. பறவைகள்  இவ்விதைகளை உண்ணும்.


உகாய் மரத்தின் பழம்
 
முகம்மது நபியவர்கள் இதன் குச்சிகளை பல் துலக்கப் பயன்படுத்தியுள்ளார்கள். முஸ்லிம்களில்  பெரும்பாலானோர் இதனை இன்றளவிலும் பல் துலக்கப் பயன்படுத்துகின்றனர். பல முஸ்லிம் பள்ளிவாசல்களில் இம்மரம் வளர்க்கப்படுகிறது. 

இதனை உலக சுகாதார நிறுவனம் வாய்ச் சுத்தத்துக்கான சிறந்த பொருளாகப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கிறது. இதில் ஏராளமான மருந்துப் பொருட்கள் காணப்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

சங்க காலம்
 
உகாய் விதை பற்றிய சுவையான செய்தி ஒன்று சங்க இலக்கியமான நற்றிணையின் 66 ஆவது பாடலில் வருகிறது. இதனைப் பாடிய புலவர் இனிசந்த நாகனார். உகாய் விதையை மேய்ந்த புறா ஒன்று அந்த விதையின் காரத்தால் துடித்ததாம். மரக்கிளையில் ஏறிக்கொண்டு கத்தியதாம் அப்போது அதன் கழுத்து மயிர் சிலிர்த்துகொண்டதாம். அதன் கண் சிவந்துபோயிற்று என பாடலில் கூறப்படுகிறது. சங்ககாலப் புலவர் ஒருவர் பெயர் உகாய்க்குடிகிழார். இவர் உகாய்க்குடி எனும் ஊரைச் சேர்ந்தவர். உகாய் மரத்தின் பெயரால் அவ்வூர் அமைந்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.
கபிலர் எழுதிய குறிஞ்சிப்பாட்டில் காட்டப்படும் 99 மலர்களில் ஒன்று பாங்கர். இது உகாய் மரத்தின் பூவையே குறிப்பதாக கூறுவர். 

பாதுகாப்பு 

இவ்வளவு சிறப்பு வாய்ந்த உகாய் மரங்கள் மிக அபூர்வமாக இராமநாதபுரம் மாவட்டக் கடற்கரைப் பகுதிகளில் காணப்படுகின்றன. பல ஆயிரம் ஆண்டுகளாக கடும் வெப்பத்தையும், வறட்சியையும் தாங்கி இம்மரங்கள் செழிப்பாக வளர்ந்து வருகின்றன. பல நோய்களைத் தீர்க்கும் மருந்தாக இம்மரத்தின் இலை, வேர், தண்டு, பழம், விதை ஆகியவை பயன்படுகின்றன. இம்மரத்தை இதன் அருமை தெரியாமல் சிலர் வெட்டி எறிந்துவிடுகிறார்கள்.
இம்மரம் வறட்சியைத் தாங்கி வளர்வதால் கடற்கரைப்பகுதிகள் முழுவதும் கருவை மரங்களை வெட்டிவிட்டு இம்மரங்களை வனத்துறை மூலம் பயிரிட்டு வளர்க்கலாம். இதன் மருத்துவப் பயன் மூலம் வருமானமும் கிடைக்கும். நிலத்தை மாசுபடுத்தி சுற்றுச்சூழலுக்கு பெரும் சவாலாக இருக்கும் கருவை மரங்களை அழித்து பூமியைக் காத்த புண்ணியமும் நமக்குக் கிடைக்கும். இம்மரங்களை கடற்கரை பகுதிகளில் நடவு செய்து பாதுகாக்கவேண்டும் என தமிழக அரசின் வனத்துறையை  திருப்புல்லாணி தொன்மைப் பாதுகாப்பு மன்றம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
 
இராமநாதபுரம் சந்தவளியான் கோயிலில் உள்ள மரம்





தந்தி டிவி நம்நாடு நிகழ்ச்சியில் - உகாய் மரங்கள் பற்றிய சிறப்பு செய்தி தொகுப்பு - இப்பள்ளி மாணவி தாதனேந்தல் சினேகா பேட்டியுடன்