Pages

Saturday 1 July 2017

தொண்டி அருகே கி.பி.1201 ஆம் ஆண்டைச் சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு




தொல்லியல் ஆய்வாளர் வே.இராஜகுரு, வரலாற்று ஆர்வலர் விமல்ராஜ், திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவிகள் அபிநயா, விசாலி, அபர்ணா, சினேகா ஆகியோர் கல்வெட்டைப் படிக்கிறார்கள்
கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு 

இராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்று பாதுகாப்பு மைய தலைவர் வே.இராஜகுரு, செயலாளர் காளிமுத்து, வரலாற்று ஆர்வலர் விமல்ராஜ், திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவிகள் அபிநயா, விசாலி, அபர்ணா, சினேகா ஆகியோர் இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே புல்லுகுடி சிவன்கோவிலில் பாண்டியர் காலக் கல்வெட்டுகள் இருப்பதை களஆய்வின்போது  கண்டுபிடித்து படியெடுத்தனர்.

இதுபற்றி தொல்லியல் ஆய்வாளர் வே.இராஜகுரு கூறியதாவது, 

ஒரே கல்வெட்டு  

இக்கோயில் விமானத்தின் கீழ்பகுதியில் குமுதம், ஜகதி, பட்டிகை ஆகிய இடங்களில் கல்வெட்டுகள் உள்ளன. இது 105 வரிகள் கொண்ட ஒரே கல்வெட்டு ஆகும். இதுவரை படியெடுக்கப்படாத இக்கல்வெட்டுகள் கி.பி.1201 ஆம் ஆண்டைச் சேர்ந்த முதலாம் சடையவர்மன் குலசேகரபாண்டியன் காலத்தைச் சேர்ந்தவை ஆகும்.

கல்வெட்டுகளில் இவ்வூர் அரும்பொற்கூற்றத்தில் உள்ள புலிகுடி எனவும், இக்கோயில் இறைவன் பெயர் ஸ்ரீகயிலாயமுடையார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேவதான இறையிலி  

சிவன்கோவிலுக்கு வரிநீக்கி தானமாக நிலம் வழங்குவதை தேவதான இறையிலி என்பர். இக்கோயிலுக்கு அரும்பொற்கூற்றத்தில் உள்ள வாகைக்குடி, சாத்தி ஏரி ஆகிய இரு ஊர்களை தேவதான இறையிலியாய் வழங்கிய செய்தியை கல்வெட்டு தெரிவிக்கிறது. 

தானமாக கொடுக்கப்பட்ட வாகைக்குடி ஆர்.எஸ்.மங்கலம் செல்லும் வழியில் இரு கி.மீ. தொலைவில்  உள்ளது. சாத்திஏரி எனும் பெயரில் இப்பகுதியில் ஊர் எதுவும் இல்லை. அது அழிந்துபோயிருக்கலாம். இப்பகுதி அரும்பொற்கூற்றத்தில் இருப்பதாக கல்வெட்டு தெரிவிக்கிறது. தொண்டி செல்லும் சாலையில் இரண்டு கி.மீ. தொலைவில்  உள்ள அரும்பூர் இக்கூற்றத்தின் தலைமையிடமாக இருக்கலாம். 

மெய்க்கீர்த்தி

கல்வெட்டு, கி.பி.1190 முதல் கி.பி.1218 வரை மதுரையை ஆட்சி செய்த முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியனின் மெய்க்கீர்த்தியுடன் தொடங்குகிறது.  இதன் முதல்பகுதி அழிந்துள்ளது.  மன்னரின் பெயர் வரும் இடங்கள் சேதமடைந்துள்ளன. மெய்க்கீர்த்திகொண்டு மன்னர் பெயர் அறியமுடிகிறது.

மன்னரின் ஒன்பதாம் ஆட்சியாண்டின் எதிராமாண்டின் எதிராமாண்டு (9+1+1) தானம் வழங்கப்பட்டுள்ளது. இதன் காலம் அவரது பதினோராம் ஆட்சியாண்டான கி.பி.1201 ஆகும்.

இக்கோயில் நிர்வாகியான தேவகன்மியிடமும், கோயில் குருக்களான  சிவப்பிராம்மணருக்கும் செய்வதாக கொடுத்த வாக்குப் படி, இக்கோயில் இறைவனுக்கு படைக்கத் தேவையான  நிவந்தங்களுக்காக இறையிலி தேவதானம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலங்களுக்கு அந்தராயம்  எனும் உள்வரியும் நீக்கப்பட்டுள்ளதாக கல்வெட்டு தெரிவிக்கிறது. 

தேவதான இறையிலியாக இரு ஊர்கள் வழங்கப்பட்டிருந்தாலும், நிலத்தின்  எல்லைகள் கல்வெட்டில் சொல்லப்படவில்லை. எனவே அந்த ஊர்களின் முழுபகுதிகளையும் கோயிலுக்கு  தானமாக வழங்கி இருக்கலாம்.

நாடுகள்  

இதில் கேரளசிங்க வளநாடு (திருப்பத்தூர்), அண்டநாடு (திருப்புவனம்),  வடதலைச் செம்பில் நாடு (முதுகுளத்தூர்) ஆகிய நாடுகளும், அரும்பொற்கூற்றம், மிழலைக் கூற்றம் (ஆவுடையார்கோயில்) ஆகிய கூற்றங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஊர்கள் 

அண்டநாட்டு பெருமணலூர் (கீழடி அருகில் உள்ளது), வடதலைச் செம்பில் நாட்டு ஆயக்குடியான அழகியபாண்டியநல்லூர் (பரமக்குடி அருகில் உள்ள ஆய்குடி), கேரளசிங்க வளநாட்டு வெளியாற்றூர், மிழலைக் கூற்றத்து சிபிராந்தகநல்லூர், கூற்றுத்தைச்சன்னூர், வடபாம்பாற்றுதியூர், பொன்பற்றி போன்ற பல ஊர்களைச் சேர்ந்த  அரசு அதிகாரிகளின் பெயர்கள் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. 

அரசு அதிகாரிகள் 

திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயில் நிர்வாகியான பொன்னம்பலக் கூத்தன் திருத்தளியான விக்கிரம பாண்டியக் கலிங்கத்தரைசன், பொய்த்தப்பி சோழன், அழகிய மணவாளன், சிவல்லவன் சிகயிலாயமுடையான், செவத்த தேவனான கைச்சியராசன், கரங்கையராசன், நுளம்பரதராசன், குமணராசன் உள்பட மொத்தம் 24 அரசு அதிகாரிகள் இதில் கையொப்பமிட்டுள்ளனர். இதில் புரவரி திணைக்கள நாயகம் எனும் அரசின் வரிக்கணக்கை நிர்வகிக்கும் அதிகாரிகள் மட்டும் 5 பேர் ஆவார்.  அவர்களில் மூவர் மிழலைக் கூற்றத்தைச் சேர்ந்தவர்கள்.
பாண்டியர்கள் வரிவசூலில் தாராளமயக் கொள்கையைக் கொண்டவர்கள். ஆனால் சோழர்கள் கெடுபிடியை பின்பற்றினார்கள். அதனால் சோழர்களின் ஆதிக்கத்தில் நூறு ஆண்டுகளுக்கும் மேல் பாண்டியநாடு இருந்தபோது வரி வருவாயை பெருக்க புரவரி திணைக்களநாயகம்  எனும் பதவி பாண்டிய நாட்டிலும் உருவாக்கப்பட்டிருந்தது. 

பெயர் மாற்றம் 

புல்லுகுடி எனும் இவ்வூர் பெயர் சோழர் காலத்தில் புலிகுடியாக மாற்றப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. புல் எனும் பெயரில் உள்ள ஊர்களில் எல்லாம் சமண சமயத் தடயங்கள் காணப்படுகின்றன. புல்லுகுடியிலும் கண்மாய் கரையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு சமண தீர்த்தங்கரர் சிலை இருந்து பின்பு அது காணாமல் போயுள்ளது. 

முரண்பாடு 

இக்கல்வெட்டின் மெய்க்கீர்த்தியில் “வில்லவர், செம்பியர், விராடர், மராடர், பல்லவர் திறையுடன் முறை முறை பணிய” என வருகிறது. அதாவது செம்பியர் எனும் சோழர்களும் திறையுடன் வந்து தன்னைப் பணிந்தார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மூன்றாம் குலோத்துங்க சோழனின் (கி.பி.1178 – கி.பி.1218) தயவில் ஆட்சி நடத்தி வந்தவர் முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளிதழ் செய்திகள் 

 






2 comments:

  1. தங்களின் முயற்சி பாராட்டத்தக்கது. தினமணியில் செய்தியை படித்தேன். தேடல் தொடர மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து தாங்கள் தெரிவித்து வரும் பாராட்டுகள் எங்களை ஊக்கப்படுத்துகிறது. மிக்க நன்றி ஐயா

      Delete